Last Updated : 23 Feb, 2021 10:34 AM

 

Published : 23 Feb 2021 10:34 AM
Last Updated : 23 Feb 2021 10:34 AM

ஹரியாணா பாஜக அரசுக்குச் சிக்கல்? நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரும் காங்கிரஸ்: ஆளுநரைச் சந்தித்து முறையீடு

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சிங் சவுதாலா: கோப்புப் படம்.

சண்டிகர்

ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது.

மாநிலத்தில் பெரிய அளவுக்கு உருவாகியுள்ள விவசாயிகள் போராட்டத்தால், மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மனோகர் லால் கட்டார் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்து ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 40 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 இடங்களும் உள்ளன. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கின்றன. இதில் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆக, பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களை விட பாஜக கூட்டணிக்கு அதிகமான ஆதரவு இருப்பதால், ஆட்சிக்குச் சிக்கல் இல்லை. இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஆளுநரைச் சந்தித்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா, ''ஆளும் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோருகிறோம். அதற்காகச் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

பூபேந்தர் சிங் ஹூடா

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா நேற்று அளித்த பேட்டியில், " ஹரியாணாவில் ஆளும் பாஜக-ஜேஜேபி கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறோம். ஹரியாணா அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த, இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் கூட்டணிக்குள் இருக்கும் எம்எல்ஏக்கள் சிலரும் மிகவும் ஊழல் நிறைந்த அரசு என அதிருப்தியுடன் இருக்கிறார்கள் . ஆதலால், எம்எல்ஏக்கள் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் மனோகர்லால் கட்டார் அரசு இழந்துவிட்டது. ஆதலால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோர உள்ளோம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரும்போதுதான் யார் யாருடன் இருப்பார்கள் என்பது தெரியவரும். இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து முறையிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறோம். சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று கோரினோம். வேளாண் சட்டங்கள், விவசாயிகள் பிரச்சினையில் மக்களின் ஆதரவை மனோகர் லால் கட்டார் இழந்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஹரியாணா சட்டப்பேரவையில் மார்ச் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x