காஷ்மீர் சண்டையில் 3 தீவிரவாதிகள் உட்பட நால்வர் பலி

காஷ்மீர் சண்டையில் 3 தீவிரவாதிகள் உட்பட நால்வர் பலி
Updated on
1 min read

காஷ்மீர் கப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தார் ராணுவ முகாமில் இன்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் மணிஷ் குமார், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறும்போது, “3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை உறுதி செய்தோம். இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்” என்றார்.

ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் நடத்தியதும் இந்த அமைப்புதான் என்று கூறப்பட்டது.

அதாவது காலை தொழுகைகளை முடித்து விட்டு ராணுவ முகாமுக்குள் புகுந்ததாகவும் ராணுவ முகாமில் தாங்கள் துப்பாக்கிகளுடன் நிலையெடுத்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே உள்ள ராணுவ முகாம் மீது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

தாங்தார் பகுதியில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தி துப்பாக்கியால் கண்மூடித் தனமாக தீவிரவாதிகள் சுட்டதாக ஆரம்ப நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 2 வீரர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் கடும் பனிமூட்டம் இருந்து வருவதால் அதிகாலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தீவிரவாதிகள் தர்ஷக் அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ளே நுழைந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததில் 3 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in