

2013-ம் ஆண்டு வன்முறை வழக்கில் டெல்லி ‘மாடல் டவுன்’ தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி நேற்று கைது செய்யப்பட்டார்.
அகிலேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பிட்டு ஜா என்பவர் அளித்த புகாரின் பேரில், வடக்கு டெல்லி ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராவதை அகி லேஷ் திரிபாதி தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கபில் குமார் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து அகிலேஷ் திரிபாதியை நேற்று கைது செய்த டெல்லி போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 2 நாள் நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி கட்சியின் 5-வது எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி ஆவார்.