Last Updated : 22 Feb, 2021 08:04 PM

 

Published : 22 Feb 2021 08:04 PM
Last Updated : 22 Feb 2021 08:04 PM

விவசாயிகள் பிரச்சினை குறித்து பாப் பாடகர்கள் கருத்து தெரிவித்தும், பிரச்சினை தீர்க்க அரசுக்கு விருப்பமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பூத்தாடி கிராம பஞ்சாயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

வயநாடு

விவசாயிகள் பிரச்சினை குறித்து பாப் பாடகர்கள் பலர் கருத்துத் தெரிவித்தபோதிலும் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு இருநாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். திரிகைபட்டா முதல் முட்டில் வரையிலான 6 கிலோமீட்டர் தொலைவுக்கு டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி பங்கு கொண்டார். அதன்பின் பூத்தாடி பஞ்சாயத்தில் குடும்பஸ்ரீ சார்பில் நடந்த திட்டங்களை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றபோது கிண்டல் செய்தார்.

ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இருந்த நேரத்தில் பிரதமர் மோடி, வேறுவழியின்றி, 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைநாட்களை அதிகரித்து, மக்களுக்குப் பணத்தை வழங்கினார். கரோனா காலத்தில் மக்களைக் காக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்பட்டது எனும் உண்மையை பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக ஒப்புக்கொண்டார். கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் கரோனா காலத்தில் அளித்தது இந்தத் திட்டம்தான்.

சுயஉதவிக்குழு, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டவை, இது பரிசு அல்ல. நமது மக்களுக்கு அதிகாரம் அளித்து வலிமையடைச் செய்யும் கருவி.

உலகின் பல்வேறு பாப் பாடகர்கள் இந்திய விவசாயிகள் நிலை குறித்துக் கவலைப்பட்டு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால், விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை. நாம் மத்திய அரசைக் கட்டாயப்படுத்தாவிட்டால், இந்த 3 வேளாண் சட்டங்களையும் அவர்கள் திரும்பப் பெறப் போவதில்லை.

கல்பேட்டாவில் ஒரு தேவாலயத்தில் கன்னியாஸ்திரிகளுடன் உரையாடிய ராகுல் காந்தி

விவசாயிகள் படும் வேதனைகளை, சிரமங்களை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. ஆனால், மத்திய அரசு டெல்லியில் அமர்ந்து கொண்டு விவசாயிகளின் வலியைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

மத்திய அரசு உருவாக்கியுள்ள 3 வேளாண் சட்டங்களும், இந்திய வேளாண்மையை அழித்துவிடும். ஒட்டுமொத்த வேளாண்துறையையும் பிரதமர் மோடி தனது சில நண்பர்களுக்கு வழங்கிவிடுவார்.

விவசாயம்தான் நமது நாட்டில் மிகப்பெரிய வணிகம். ஏறக்குறைய ரூ.40 லட்சம் கோடி மதிப்புள்ளது, லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த வேளாண்மையைச் செய்து வருகிறார்கள். வேளாண்மை மட்டும்தான் பாரத மாதாவின் தொழில்.ஆனால், சிலர் அந்தத் தொழிலைச் சிலர் சொந்தமாக்க விரும்புகிறார்கள்.

பாரத மாதாவின் தொழிலை நரேந்திர மோடியின் சில நண்பர்கள் எடுத்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதனால்தான் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று, நாங்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறோம். அவர்களுக்கு உதவுகிறோம். இந்த சட்டங்களை பாஜக அரசு திரும்பப்பெற வைப்போம் என நம்புகிறோம்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x