Published : 22 Feb 2021 07:03 PM
Last Updated : 22 Feb 2021 07:03 PM

தேசிய தொழில்நுட்ப விருது: தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க விண்ணப்பங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது.

சந்தையில் புதுமையை கொண்டு வரும் மற்றும் தற்சார்பு இந்தியா தொலை நோக்குக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில் நுட்ப குழுவினரை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான விருது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தால் வழங்கப்பட்டது. 128 விண்ணப்பங்களை இரண்டு முறை ஆய்வு செய்த பிரபல தொழில்நுட்ப நிபுணர்கள், வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில் சென்னையைச் சேர்ந்த எஸ்.வி.பி. லேசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆட்டோ கேம்2டி கேம் மென்பொருள், மற்றும் நகை, பர்னிச்சர் தயாரிப்பில் இந்நிறுவனத்தின் இயந்திர தொழில்நுட்பங்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்ப்டடுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், தஞ்சாவூரைச் சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நுண் நீர் பாசிகளில் இருந்து டோகோசஹெக்ஸெனோயிக் அமிலம் என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இது இதய நோய் மற்றும் மூளை முடக்கு வாதத்தை தடுக்க கூடியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x