

சுதந்திரத்துக்குப் பின் அசாம் , வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை இதற்கு முன் ஆண்டவர்கள் புறக்கணித்துவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றிருந்தார். கடந்த ஒரு மாதத்துக்குள் 3-வது முறையாகப் பிரதமர் மோடி அசாம் மாநிலம் சென்றார். ரூ.3,222 கோடியில் உருவாக்கப்பட்ட 3 பெட்ரோலிய திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதன்பின் தேமாஜி நகரில் ரூ.45 கோடியில் அமைய உள்ள தேமாஜி பொறியியல் கல்லூரி, ரூ.55 கோடியில் உருவாக உள்ள சால்குச்சி பொறியியல் கல்லூரிக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு முன் கடந்த 7-ம் தேதி அசாம் வந்திருந்த பிரதமர் மோடி ரூ.9,310 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கடந்த 18-ம் தேதி 2-வது முறையாக வந்திருந்த மோடி, ரூ.10 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்.
அதன்பின் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''சுதந்திரத்துக்குப் பின், அசாம் மாநிலத்தின் வளர்ச்சியையும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியையும் இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் புறக்கணித்துவிட்டனர். டெல்லிக்கும் திஸ்பூருக்கும் இடையே வெகு தொலைவு இருந்ததாக இதற்கு முன் ஆண்டவர்கள் நம்பினர்.
ஆனால், இப்போது டெல்லி வெகு தொலைவில் இல்லை. உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகினர். வடகிழக்கு மண்டலத்துக்குச் சுகாதாரம், கல்வி, தொழில் வளர்ச்சி ஏதும் சென்று சேராமல் புறக்கணித்துவிட்டனர்.
அசாம் மாநிலமும், வடகிழக்கு மாநிலங்களும் இந்த தேசத்தின் புதிய வளர்ச்சிக்கான இன்ஜின்கள். அசாம் மாநிலத்தின் தொடர் முயற்சிகளால் 20க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மொழிகளில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதால், ஏழைக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் கூட மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் உயர முடியும்.
அசாம் மாநிலம் செழுமையான கச்சா எண்ணெய் வளம் கொண்டது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை இங்கு 40 சதவீத குடும்பங்கள் மட்டும்தான் சமையல் கேஸ் இணைப்பு வைத்திருந்தன. ஆனால், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் சமையல் கேஸ் இணைப்பு வைத்துள்ளனர். ஒரு கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.
குழாயில் எரிவாயு, கண்ணாடி இழை கேபிள், குடிநீர் வசதி போன்றவை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. எரிசக்தி, மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்தின் மூலம் அசாம் மக்களின் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும். வடகிழக்கு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.
அசாம் மாநிலத்தின் தேயிலை, சுற்றுலா, கைத்தறி, கைவினைப் பொருட்கள் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை. இந்தத் துறையில் கொண்டுவரப்படும் முன்னேற்றத்தால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கம் வலுவடையும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.