

மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பகுதிகளை, குறிப்பாக பதற்றமான பகுதிகளை நன்கு அறிவதற்கும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கம்.
அப்போதுதான், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து நம்பகமான தகவல்களை திரட்டி நிலவரத்தை முன்கூட்டியே ஆய்வு செய்ய முடியும். இந்த நடைமுறை கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து பின்பற்றப்படுகிறது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதேப்போல்தான் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கூட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களான அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய ஆயுதப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய ஆயுதப்படைகளை அனுப்பிவைக்கும் உத்தரவு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று அனுப்பப்பட்டது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.