Last Updated : 22 Feb, 2021 03:16 AM

 

Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

25,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்தவர்; உடல்நலம் பாதித்த பத்மஸ்ரீ சாச்சாவின் சிகிச்சைக்கு உதவ யாரும் இல்லை

அயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்தவர் ‘பத்ம ’ ஷெரீப் சாச்சா (சித்தப்பா). தற்போது உடல்நலம் குன்றி படுக்கையில் இருந்தும் சிகிச்சைக்கு நிதி உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்.

உ.பி.யின் அயோத்தியா மாவட்டம் பைஸாபாத்தின் சப்ஜி மண்டிபகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் முகம்மது ஷெரீப் (83). கடந்த 27 ஆண்டுகளாக அயோத்தியில் உயிரிழந்த இந்து,முஸ்லிம் உள்ளிட்ட ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்செய்து வருகிறார்.

இதற்கான செலவுகளை தனதுவருமானத்திலேயே சமாளித்து வந்தார். இதனால், ‘ஷெரீப் சாச்சா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். தற்போது அவரது உடல் நலம்குன்றியுள்ளது. இதற்கு சிகிச்சைக்கான பணமும் இன்றி படுத்தபடுக்கையில் கிடக்கிறார் ஷெரீப்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஷெரீப்பின் மனைவி பீபி கூறும்போது, ‘‘கிடைத்த சிறிய தொகையிலும் இவர் ஆதரவற்ற உடல்களுக்கு அடக்கம் செய்ததால் பணம் சேர்த்து வைக்க முடியவில்லை. இதனால், தனியார் மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளிக்க பணம் இன்றி அவதிப்படுகிறோம். பல உயிரற்ற உடல்களுக்கு உதவியவருக்கு உதவ இன்று எவரும் முன்வராமல் இருப்பது கவலை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ஷெரீப்பின் இந்த சேவையின் பின்னணியில் அவரது குடும்ப வாழ்க்கையில் 1993-ல் நிகழ்ந்த சோகம் உள்ளது. அருகிலுள்ள சுல்தான்பூருக்கு ஒரு பணியாக சென்ற ஷெரீப்பின் 4 மகன்களில் ஒருவரான முகம்மது ரெய்ஸ் வீடு திரும்பவில்லை. ரெய்ஸின் உடல் அநாதைப் பிணமாகக் கருதி அடக்கமானது பிறகு தெரிந்தது.

அதன்பின், ஆதரவற்றதாக கருதப்பட்டு இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய தொடங்கினார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜனவரியில் ஷெரீப்புக்கு ‘பத்மஸ்ரீ ’விருது அறிவிக்கப்பட்டது. கரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விருதை இனி ஷெரீப் நேரில் சென்று பெற முடியாத நிலையில் இருக்கிறார்.

மற்ற 3 மகன்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். 2 மகன்கள் குறைந்த வருவாய் ஈட்டுவதால் தந்தையின் மருத்துவ செலவை ஏற்க முடியாத சூழலில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x