5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.படம்: பிடிஐ
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.படம்: பிடிஐ
Updated on
1 min read

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நேற்றுநடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், கட்சியின் தேசிய நிர்வாகிகள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்வது தொடர்பாக அந்த மாநில நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

இவை தவிர தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அடுத்த 2 வாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம், அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in