Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் நிர்ணயிப்பது இல்லை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புப் பேட்டி

இந்து குழுமத்தின் ‘பிஸினஸ் லைன்’ பத்திரிகைக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் சிறப்புபேட்டி அளித்தார். அப்போது, நாட்டின் நிர்வாகக் கொள்கை, பெட்ரோல், டீசல்விலை உயர்வு, வங்கிகள் தனியார் மயமாக்கல் உட்பட பல்வேறு பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து கூறினார். அதில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் மோடி கூறியபடி உங்களது பட்ஜெட், தொழில் துறைக்கு சாதகமாக பல அம்சங்களைக் கொண்டிருக் கின்றன. இதை நிர்வாக நடைமுறை களில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள அடிப்படை மாற்றமாக பார்க்கலாமா?

நிர்வாகம் தொடர்பான அடிப்படை மாற்றம், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே தொடங்கிவிட்டது. தற்போதுஅதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், கருத்தியல் ரீதியாகநாங்கள் கட்சியின் மைய நோக்கத்தில்இருந்து விலகிவிடவில்லை.

கடந்த 2014 - 2019 கால கட்டத்தில், மாநிலங்களவையில் எங்களது எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போதுஇரு அவைகளிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். இதனால் நாங்கள் திட்டமிட்டிருக்கும் சீர்திருத்தங் களைக் கொண்டு வருவது எளிதாகி இருக்கிறது. தற்போதைய சூழலில் நமது நாட்டில் சீர்திருத்தம் மிக அவசியமானதாகிறது. சோசியலிஸம் போன்ற வெளிநாட்டுக் கருத்தியல்களை நமது நாட்டில் பொருத்த முயற்சிக்கும் போது, அது அமைப்பை இறுக்கமானாதாக ஆக்கிவிடுகிறது. தொழில் செயல்பாடுகளை முடக்கி விடுகிறது. அத்தகைய இறுக்கத் தன்மையை களைவதே எங்கள் நோக்கம். ஒரு நாட்டின்பொருளாதாரம் சிறப்பாக செயல்படாவிட்டால், சொத்துக்கள் உருவாக்கப்படா விட்டால் அந்த நாடு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும்.

பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா விற்பனையில் ஏன் இவ்வளவு தாமதம்?

அந்த இரு நிறுவனங்களை வாங்குவதற்கு கணிசமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு உலகின் பொருளாதாரம் மந்தநிலைக்குச் சென்றுள்ளது. தவிர, விற்பனை தொடர்பான அனைத்து விஷயங்களையும் சரிபார்த்து வருகிறோம். இந்த நடைமுறைகள் காரணமாகவே தாமதம் ஆகியுள்ளது. ஒரு குடும்பத்துக்குள், பாரம்பரிய சொத்தை விற்பதென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தரப்புகளையும் நீங்கள் கவனமாக கேட்க வேண்டும். உணர்வு சம்பந்தப்பட்ட நடைமுறை அது.

பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள். இது மிகவும் பழைய இலக்கு இல்லையா?

நாங்கள் அனைத்து முடிவுகளையும் நடைமுறை சூழல் சார்ந்தே எடுக்கிறோம். எல்லாவற்றையும் யதார்த்தமாக அணுகுகிறோம். இந்த பட்ஜெட்டில் உள்ள இலக்குகள் அனைத்தும், நடைமுறையில் சாத்தியமாக கூடியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. பங்கு விலக்கல் இலக்கு தொடர்பாக கடைசி தருணம் வரையிலும் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். எது எட்டப்பட கூடியது என்பதை அலசியே இந்தப் பட்ஜெட்டை தயாரித்து உள்ளோம்.

பெட்ரோலியத் தயாரிப்புகளுக்கு நிறைய ‘செஸ்’ வரி விதிக்கப்பட்டுஇருக்கிறது. இந்தப் பட்ஜெட்டில் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு என புதிதாக செஸ் வரியை கொண்டு வந்து இருக்கிறீர்கள். செஸ் வரியானது வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை குறைத்து விடுகிறது. இவ்வாறு புதிய செஸ் வரிகளை அறிமுகம் செய்வது சரியா?

ஆமாம். ஒப்புக் கொள்கிறேன், செஸ் வரியானது மாநிலங்களுக்கான வரி வருவாயைக் குறைத்து விடுகிறது. நாங்கள் இதுகுறித்து நிறையவே யோசித்தோம். ஆனால், எங்கள் நோக்கம் மாநிலங்களில் வேளாண் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை பெறுவதுதான்.

இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருக்கிறீர்கள். லாபம் தரும் பெரிய வங்கிகளை விற்பீர்களா அல்லது நெருக்கடியில் இருக்கும் சிறிய வங்கிகளை விற்பீர்களா?

இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து வங்கிகளும் தொழில் முறையாக சிறப்பாக செயல்படுவதையே விரும்புகிறோம். ஆர்பிஐ-யின் திருத்த நடவடிக்கையில் இருந்து வங்கிகள் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். பொதுத் துறை வங்கிகளின் அன்றாட முடிவுகளில் நாங்கள் தலையிட்டதில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா வலிமையான வங்கிகளைக் கொண்டிருக்க வேண்டும். வங்கிகள் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இருந்து விலகி, வர்த்தகத்துக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குகிறோம். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கென நிதி நிறுவனங்களை (டிஎஃப்ஐ) உருவாக்குகிறோம். விரை விலேயே அதன் செயல் திட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக என்ன திட்டம் கொண்டு வர இருக்கிறீர்கள்? ரூ.15,000 கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமானதாகவே அது தொடருமா?

இபிஎஃப் திட்டம் தொடருமா அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்துடன் அது இணைக்கப்படுமா என்பதாக உங்கள் கேள்வியைப் புரிந்து கொள்கிறேன். நிச்சயமாக இபிஎஃப் திட்டம் தொடரும். ரூ.15,000-க்கு மேல் வருமான ஈட்டுபவர்கள் இபிஎஃப் திட்டத்தில் இருப்பதை தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.வருடத்துக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இபிஎஃப் கொண்டிருப்பவர்களுக்கான வரியை மறு ஆய்வு செய்ய உள்ளோம்.

ஏன் நீங்கள் பெட்ரோல், டீசலுக்கு வரியைக் குறைக்கத் தயங்குகிறீர்கள்? மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.30 முதல் ரூ.32 வரை எடுத்துக் கொள்கிறது. மாநில அரசுகள் ரூ.19 முதல் ரூ.20 வரை எடுத்துக் கொள்கிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அரசு கையில் ஒன்றும் இல்லை.கடந்த நவம்பர் மாதம் முதல் உலகளவில் எண்ணெய் விலை ஏறிக்கொண் டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டுமென்றால், மத்திய அரசு வரியை குறைப்பது மட்டும் தீர்வாகாது. மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றாக அமர்ந்து இதுகுறித்து பேச வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது மற்றொரு வாய்ப்பாக இருக்கிறது. அது நாடு முழுவதும் ஒரே விலை இருப்பதை உறுதி செய்யும். ஜிஎஸ்டி கவுன்சில் அது குறித்தான சாத்தியங்களை ஆராயும்.ஆனால், இறுதியில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயம் தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சம் தெளிவாக பதில் சொல்ல முடியும்.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதம் முன்பாக சொன்னீர்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு அழுத்தத்தைத் தந்ததா?

இல்லை. இந்தப் பட்ஜெட்டை தயாரிக்கும் போது நான் நிதானமாகதான் இருந்தேன். பட்ஜெட் தாக்கல் செய்ய இருந்த அந்த 30 நிமிடங்கள்தான் கடினமாக இருந்தன. விருந்தினர் அறையில் இருந்த எனது மாமாவிடம் சென்று ஆசி வாங்கினேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x