Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

திறமைக்கு முக்கியம் அளிப்பதாக தேசிய தேர்வுகள் மாற வேண்டும்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்

புவனேஸ்வர்

நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் 6-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நீட், ஜேஇஇ, யுபிஎஸ்சி போன்ற தேசியஅளவிலான தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால், இந்த தேர்வுகளானது செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே தேர்ச்சிபெறும் வகையில் அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் பணம்கொடுத்து, பயிற்சி வகுப்புகளில்சேர்ந்து பயிலும் மாணவர்களால் தான் இத்தேர்வுகளில் தேர்ச்சி அடைய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. அதே சமயத்தில், இத்தேர்வுகளில் திறமைக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிய வில்லை. நம் நாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பயிற்சி வகுப்புகளில் சேரும் அளவுக்கு அவர்களுக்கு பொருளாதார வசதி கிடையாது. அதுபோன்ற மாணவர்களை நாம் புறக்கணிக்கலாமா? இத்தகைய தேர்வு முறைகளால் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு நீதிமறுக்கப்படுகிறது. இது நியாயம்தானா? அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதமாக வும், திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் நம் தேர்வு முறைகள் மாற வேண்டும். இந்த விவகாரத்தில் நிதி ஆயோக் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழலில், நம்நாட்டில் நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் அரசியல் ஆக்கப்படுகின்றன. கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் தேர்தல் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. இந்தக் கண்ணோட்டமானது நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த மனநிலையில் இருந்து நம் நாடு விரைவில் வெளியே வர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.

மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, கரோனா அச்சுறுத்தலை எவ்வாறு ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற்றது என்பதை உலக நாடுகள் பிரம்மிப்புடன் பார்க்கின்றன. இந்தவிஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. நமது நாடு சந்திக்கும் ஒவ் வொரு பிரச்சினையையும் இதே ஒற்றுமையுடன் எதிர்கொண்டு நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நவீன் பட்நாயக் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x