

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா பரிசோதனை, கண்காணிப்பை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மகாராஷ் டிராவில் கரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 6,281 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் நேற்றுபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. வரும் 28-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். வைரஸ் பரவலை பொறுத்துஅடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமராவதி மாவட்டத்தில் நேற்றுபுதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டன. இதன்படி இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இந்த 7 நாட்களும் அத்தியாவசிய கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரே கூறும்போது, "கரோனா தடுப்பு நடைமுறைகளை பொது மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த8 நாட்களில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வரும்" என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் 1,45,634 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 58,883 பேரும் மகாராஷ்டிராவில் 49,630 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த நோயாளிகளில் இரு மாநிலங்களில் மட்டும் 74 சதவீதம் பேர் உள்ளனர்.
அண்மை காலமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் 263 பேர், மத்திய பிரதேசத்தில் 257 பேர், பஞ்சாபில் 352 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதார துறை சுற்றறிக்கை
மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றை கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும்.
வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். மரபணு மாறிய கரோனாகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் தலைவர் அறிவுரை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறும்போது, "நாடு முழுவதும் 240-க்கும் மேற்பட்ட புதிய வகைகரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் தற்போது பரவும் கரோனாஅதிவேகமாக தொற்றக்கூடிய தாகும். ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி உருவானவர்களையும் இந்த வைரஸ் தொற்றக்கூடும். எனவே நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.