

நாடு முழுவதும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை வருமாறு:
கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறை வாக உள்ளது. இந்தியப் பொருளா தாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்துவதே அரசின் தலையாய நோக்கம். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். மின்னணு ஆளுகை திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினரும் சரிசமமாக பங்கேற்க செய்யப்படும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரி விதிப்பு எளிமையாக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படும். அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக உற்பத்தித்துறை, சுற்றுலா, வேளாண்சார்ந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வகுப்பு கலவரம் தடுக்கப்படும்
ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பு வலுப்படுத்தப்படும். அந்தச் சட்டத்தின் கீழ் விரைவில் உரிய விதிகள் வகுக்கப்படும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் படும். இதில் முதல் நடவடிக் கையாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தீவிரவாதம், கலவரம் மற்றும் குற்ற நடவடிக்கைகள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து வகுப்பு கலவரத்தைத் தடுக்கவும் இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் தேசிய திட்டம் உருவாக்கப்படும்.
வைர நாற்கர ரயில் திட்டம்
ரயில்வே துறையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும். வைர நாற்கர ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரயில்வே துறை நவீனமயமாக்கப்படும்.
நாடு முழுவதும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்படும். மலைப் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியங்களுக்கு ரயில்வே திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். ரயில் போக்கு வரத்தில் அதிவேகம், நேரம் தவறாமை ஆகியவை கடைப்பிடிக் கப்படும்.
சிறிய விமான நிலையங்கள்
சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த செலவிலான விமான நிலையங்கள் உருவாக் கப்படும். நாட்டின் மிக நீளமான கடற்கரை, கப்பல் போக்கு வரத்துக்கு முழுமையாக பயன் படுத்தப்படும்.
2022-ல் அனைவருக்கும் வீடு
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2022-க்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கழிவறை, 24 மணி நேர மின்வசதியுடன்கூடிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.