மக்களின் துயரத்தில் அரசு லாபம் ஈட்டுகிறது; பெட்ரோல், டீசல் உயர்வைத் திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களின் துயரத்தில் அரசு லாபம் ஈட்டுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12 நாட்களாக அதிகரித்து வந்தது. இதனால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் சிலநகரங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. மும்பையில் டீசல் லிட்டர் ரூ.97 ஆகவும், டெல்லியில் லிட்டர் ரூ.90 ஆகவும் அதிகரித்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:

நாட்டின் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையால், ஒவ்வொரு குடிமகனின் ஆதங்கத்தையும், வேதனையையும் நான் உங்களுக்கு தெரிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

ஒருபுறம் இந்தியா வேலையிழப்பு, ஊதிய குறைப்பையும், நடுத்தர மக்களின் வருமானம் குறைவையும் சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது, ஆனால், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை கட்டுப்பாடில்லாமல் உயர்ந்து வருகிறது

சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்போர், நடுத்தர மக்கள் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்த சவால்கள் அனைத்தும் பணவீக்கமாக வந்து, வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எப்போதும் இல்லாமல் வகையில் விலை உயர்ந்துள்ளது.

மிகவும் வருத்தமாக இருக்கிறது, இந்த நேரத்தில்கூட மக்களின் துயரத்திலும், வேதனையிலும் அரசு லாபம் ஈட்டுகிறது.

பெட்ரோல் , டீசல் விலை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் பல்வேறு பகுதிகளில் லிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது. அதிகரித்து வரும் டீசல் விலை, லட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியஅளவில் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த கச்சா எண்ணெய் விலையில் இப்போது பாதிதான் இப்போது இருக்கிறது. இருப்பினும் உங்கள் அரசு கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தியுள்ளது. இது லாபம் ஈட்டும் செயல் என்றுதானே கூற முடியும்.

கடந்த 7ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவிட்டு தங்களின் தவறான நிர்வாகம்தான் அனைத்தும் காரணம், ஆனால், தொடர்ந்து கடந்த கால ஆட்சியைக் குறை கூறுவது வேதனையாக இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் அதன் பலன் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, அவர்களின் நலன்களுக்கு மாறாகச் செயல்படக்கூடாது.

ஆதலால், பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைத் திரும்பப் பெற்று, நடுத்தர மக்களுக்கும், மாதச் சம்பளம் பெறும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் அந்தப் பலனை வழங்கிட வேண்டும்.

ஏதாவது காரணம் கூறி தப்பிப்பதைவிட்டு, உங்கள் அரசு தீர்வுகளைக் காண வேண்டிய நேரம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நாம் நம்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in