

கேரள சட்டப்பேரவை் தேர்தலில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் அளவுக்குப் பெரிய போட்டியாளர் இல்லை, கடந்த முறை வென்ற ஒரு இடத்திலிருந்து அதிகமாக வென்றாலே பெரிய விஷயம்தான் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலுக்குவரப் போவது குறித்து வியப்பாக இருக்கிறது. அவரால் சிறிய தாக்கமே ஏற்படும் என்றும் சசி தரூர் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
இதில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக இருந்தாலும், மாநிலத்தில் இதுவரை பெரிய தாக்கத்தைத் தேர்தலில் ஏற்படுத்தியது இல்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வென்றது, மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை.
இந்த முறையும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே பாஜகவுக்கு வலு சேர்க்கும் வகையில், மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாஜகவில் இணையப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மெட்ரோ மேன் என்று பேசப்படும் ஸ்ரீதீரன் தேர்தலில் போட்டியிடுவேன், பாஜகவில் சேரப்போகிறேன் என்ற அறிவிப்பு கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது. பொறியியல் துறையில் வல்லுநரான ஸ்ரீதரன் நீண்டகாலம் அந்த துறையில் இருந்தவர், பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய அவருக்கு, இந்த ஜனநாயகத்தில் கொள்கைகளைச் சரியாகச் செயல்படுத்த வராது.
ஸ்ரீதரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை, அரசியல் பின்புலமும் இல்லை. அப்படி இருக்கும் போது அவரால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைவான தாக்கத்தைத்தான் ஏற்படுத்த முடியும். அரசியல் உலகம் என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.
நான் 53 வயதில் அரசியலுக்குள் வந்தேன். எனக்கு போதுமான தகுதி இருப்பதாக உணர்ந்தாலும்கூட, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே நான் தாமதித்துவிட்டேன் என நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது 88 வயதில் அரசியலுக்குள் வரும் ஸ்ரீதரனைப் பற்றி என்ன சொல்ல முடியும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தீவிரமான போட்டியாளராக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்தான் வென்றது அதற்குமேல் அதிகமாக இந்த தேர்தலில் வென்றாலே அது பெரிய விஷயமாகத்தான் இருக்கும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருக்கும் அனுபவம், புத்தாக்க உற்சாகம் ஆகியவைதான் கேரளாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் என்ன கூறியுள்ளதோ அதைச் செய்யும் அரசியல் தலைவராக நான் இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கேரள மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைச் செய்யும் தலைவராகவே நான் இருக்கிறேன்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்