25 ஆயிரம் ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்தவர்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட உ.பி. முதியவர் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் தவிப்பு

முகமது ஷெரீப் : கோப்புப்படம்
முகமது ஷெரீப் : கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட முதியவர் முகமது ஷெரீப் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல் தவிக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருது அந்த முதியவருக்கு வழங்கப்படவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த முகமது ஷெரீப் பத்மஸ்ரீ விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ என குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர்.

அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப் (வயது83). சைக்கிள் மெக்கானிக்காக பணியாற்றிவரும் முகமது ஷெரீப் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆதரவற்றவர்கள் உயிரிழந்தால் அவர்களைத் தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார்.

நோயில் படுக்கையாக கிடக்கும் முகமது ஷெரீப் : படம் உதவி ட்விட்டர்
நோயில் படுக்கையாக கிடக்கும் முகமது ஷெரீப் : படம் உதவி ட்விட்டர்

இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை முகமது ஷெரீப் தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்துள்ளார். முகமது ஷெரீப்பின் தன்னலமில்லாத சேவைப் பார்த்த மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ஆனால், மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருது இதுவரை முகமது ஷெரீப்புக்கு வழங்கப்படவில்லை.

முகமது ஷெரீப் முதுமையால் தற்போது நோய்வாய்ப்பட்டு, வறுமையால் மருத்துவச் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கிறார். பிடிஐ நிருபர் நேரடியாக முகமது ஷெரீப்பின் இல்லத்துக்குச் சென்று அவரின் நிலைமையைப் பதிவு செய்துள்ளார்.

முதமது ஷெரீப்பின் மகன் முகமது ஷெகீர் கூறுகையில் " கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதில் என் தந்தையின் சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தது. உங்களுக்கு அழைப்பு வரும்போது, டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்து விருதைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டது. இதற்காக என் தந்தை ரூ.2500 கடன் பெற்று டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் கரோனா வைரஸ் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வாங்கிய கடனைக் கூட செலுத்த முடியவில்லை. என் தந்தை பத்மஸ்ரீ விருதைப் பெறாமலேயே சென்றுவிடுவாரோ எனக் கவலையாக இருக்கிறது " எனத் தெரிவித்தார்.

முகமது ஷெரீப் மனைவி பீபி (வயது73) கூறுகையில் " நாங்கள் ஏராளமான கடனில் இருக்கிறோம். எனது கணவருக்கு மருந்து வாங்கக்கூடப் பணம் இல்லாமல், அருகே உள்ள மருந்துக்கடையில் கடன் பெற்றுள்ளோம்.கரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் எனது கணவருக்குப் பத்மஸ்ரீ விருது கிடைக்கவில்லை. மத்திய அரசின் தொலைப்பேசி அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in