Last Updated : 21 Feb, 2021 12:36 PM

 

Published : 21 Feb 2021 12:36 PM
Last Updated : 21 Feb 2021 12:36 PM

3 மாத இடைவெளியில் ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசியைச் செலுத்தினால் அதிக பலன்: லான்செட் ஆய்வில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரிக்கும் கரோனா தடுப்பூசியை 3 மாத இடைவெளிவிட்டு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதிகமான பலன், அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி நீண்டகாலத்துக்கு இருக்கும் என லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

3 மாத இடைவெளியில் 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு மருந்து வீரியமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில், கிளினிக்கல் ஆய்வில் பங்கேற்ற பிரேசில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 17,178 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவுகளை ஆய்வாளர்கள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அதில் பேராசிரியர் ஆன்ட்ரூ பொலார்ட் கூறியிருப்பதாவது:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரிக்கும் கரோனா தடுப்பூசியை முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்த 2-வது டோஸ்ட் போட்டுக்கொள்வதற்கு 3 மாதங்கள் இடைவெளிவிட்டுப் போட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் முதல் டோஸ் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டாலே நீண்டகாலத்துக்கு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி நீடிக்கும் நிலையில் 2-வது தடுப்பூசிக்கு 12 வாரங்கள் இடைவெளி எடுக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி விநியோகம் என்பது குறுகிய காலத்துக்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன்தான் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும், கொள்கைகளை வகுப்போரும், மக்களுக்குப் பயன்கிடைக்குமாறு எவ்வாறு தடுப்பூசியைச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும்.

மிகப்பெரிய அளவில் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி கொடுத்தாலே அது உடனடியாக பெரியஅளவுக்கு நோய்த்தடுப்பாகச் செயல்படும். ஆதலால், குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறைவாகத்தான் விநியோகம் செய்யப்படுகிறது.

நீண்டகாலத்தில் அதாவது 3 மாத இடைவெளியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் எடுத்துக்கொண்டால், அதிகமான நாட்களுக்கு உடலில்நோய்தடுப்பாற்றை உண்டாக்கும், கரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆதலால், முதல் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 2-வது டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் 14 நாட்கள் இடைவெளியிலும், 21 நாட்கள் இடைவெளியிலும் அல்லது 6 வாரங்களுக்குள் 2-வது டோஸ் மருந்து எடுத்துக்கொண்டவர்களைவிட, 12 வாரங்கள் அல்லது 3 மாதங்களுக்குப் பின் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசி நன்கு பயனளிக்கிறது.

நீண்டகால இடைவெளியில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவு அதிகரிக்கும். 3 மாதங்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசியை எடுக்கும்போது, 76 சதவீதம் நோய்எதிர்ப்புசக்தி உருவாக வாய்ப்புள்ளது.

இதேசமயம், ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டால்,அது எவ்வளவு நாட்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x