கலாச்சார காவல் ஆபத்தானது: நந்திதா தாஸ்

கலாச்சார காவல் ஆபத்தானது: நந்திதா தாஸ்
Updated on
1 min read

சமுதாயத்தின் வளர்ச்சிக்கு, பேச்சுரிமை அடிப்படைத் தேவை என்கிறார் நந்திதா தாஸ்.

'ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பேச்சுரிமை அவசியமானது. அடிப்படைத் தேவையும்கூட. ஆனால், அண்மைக்காலமாக சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடான கலாச்சார காவல் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது' என செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகையும், தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறும்போது, "நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நடைபெறும் கலாச்சார காவல் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். இது போன்ற கலாச்சார காவல் நடவடிக்கைகள், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு, மிகவும் ஆபத்தானது.

நான் நடுவராகச் செல்லும் திரைப்பட விழாக்களில், வெவ்வேறு விதமான பார்வைகள் இருக்கும். ஆனால் அந்தப்பார்வைகள் மூலமாகத்தான், அடுத்தவரின் கருத்தையும் மதிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். சரியோ, தவறோ ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

தென் கிழக்காசியப் பிராந்தியங்களில், மிக முக்கியமான ஜனநாயக நாடு நம்முடையது. ஜனநாயகத்தின் பெரிய தூணாக விளங்கும் இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகள் வியக்கின்றன. ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நாம் பெருமை கொள்ளும் அதே நேரம், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

சமுதாயம் வளர வேண்டுமானால், கருத்து சுதந்திரம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. நீங்களும், நானும் கருத்துகளில் ஒட்டுமொத்தமாக வேறுபடலாம். ஆனால் அவற்றைச் சொல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டால், எப்படிப் புதிய குரலோ, உரையாடலோ உருவாகும்? எப்படி நானோ, சமுதாயமோ, நாடோ வளர முடியும்?" என்றார் நந்திதா தாஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in