

இன்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்தபின் ஏற்படும் காலியிடங் களை நிரப்ப தனியார் கல்லூரி களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிப்பதற்கு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.
கோவை மண்டல தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம் சார்பில் வழக்கறிஞர் ஹரிஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள மனுவில், ‘அண்ணா பல்கலைக்கழகம் நடத் தும் இன்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்தபின் ஏற்படும் காலியிடங் களை நிரப்ப ஒருமாதம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனு, உச்சநீதிமன்ற நீதிபதி கள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் முன்பு திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் பிரசாத், ‘உச்சநீதி மன்றம் ஏற்கெனவே பிறப்பித் துள்ள உத்தரவைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்தப்படு கிறது. தமிழகத்தில் இன்ஜினீயரிங் கலந்தாய்வு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்து விடும். அதன்பிறகு ஏற்படும் காலியிடங் களை நிரப்ப தனியார் இன்ஜினீ யரிங் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 15 நாட்கள் வழங்கப் பட்டுள்ளது. இந்த கால அவகாசம் போதுமானது. கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை,’ என்று எதிர்ப்பு தெரி வித்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜராகி, ‘நாங்கள் கூடுதல் கால அவகாசம் கோருவதற்கு முக்கிய காரணம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன் சிலின் தாமதம் தான். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதிய கல்லூரிகள், படிப்புகளுக்கு ஒப்பு தல் அளிக்க ஏப்ரல் 10-ம் தேதி கடைசி நாள் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) ஜூன் 10-ம் தேதி வரை கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் இரண்டு மாதம் கோரவில்லை. கூடுதலாக 15 நாட்கள் மட்டுமே கோருகிறோம்’ என்று வாதிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தர விட்டனர். பின்னர் தனியார் கல் லூரிகள் சங்கம் சார்பில் பதில் தெரிவிக்க உத்தரவிட்டனர். வழக் கின் அடுத்த விசாரணை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.