

ஒரே தேசம், ஒரே தர அளவு’ இயக்கத்தை தொடங்குவதற்கான நேரம் வந்து விட்டது என மத்திய அமைச்சர் அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
சர்வதேச தரங்களை நிர்ணயிப்பதில் உலகத்திற்கு இந்தியா வழிகாட்ட வேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோக அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
இந்திய தரநிர்ணய அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அவர், உற்பத்தி மற்றும் சேவைகள் தொழில்களின் அனைத்து பிரிவுகளும் தேசிய இயக்கத்தில் இணைக்கப்பட்டு, அனைத்து வகையான அரசு கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் தேசிய அளவில் ஒரே மாதிரியான தன்மை உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
ஒரு நாட்டின் வலிமையும், குணமும் அதன் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தில் தான் பெரும்பாலும் அளவிடப்படுகிறது. சிறந்ததை மட்டுமே இந்தியா வழங்குவதற்கான நேரமிது என்று அமைச்சர் கூறினார்.
இத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக சர்வதேச கூட்டுகளை ஏற்படுத்த இந்திய தரநிர்ணய அமைப்பு முயல வேண்டும் என்றும் கோயல் கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவில் செய்யப்படும் ஆய்வக பரிசோதனைகள் சர்வதேச தரமுடையவையாக இருக்க வேண்டும் என்றார். “நவீன உபகரணங்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று கூறிய அவர், இந்திய தரநிர்ணய அமைப்பு மற்றும் அரசு ஆய்வகங்களுக்கிடையேயான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என்றார்.
பல்வேறு அமைப்புகளும், பொதுத்துறை நிறுவனங்களும் பல்வேறு வகையான தரநிலைகளை பின்பற்றுவதாகவும், அனைத்தையும் ஒரே தர அளவாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.