

காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து டூல்கிட் தயாரிப்பு பணியில் திஷா ரவி ஈடுபட்டு இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உலகளாவிய சதிக்கும், விவசாயிகள் போராட்டத்தில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தவும் முயன்றுள்ளார். ஆதலால், திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திஷா ரவியின் ஜாமீன் மீதான தீர்ப்பை வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.
இந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்தநிகிகா ஜேக்கப், அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக திஷா ரவியை கடந்த 14–ம் தேதி பெங்களூருவில் வைத்து டெல்லி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து டெல்லி கொண்டு சென்றனர். அதன்பின் 5 நாட்கள் போலீஸ் காவலில் திஷா ரவி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் திஷா ரவி இருந்து வருகிறார்.
இந்நிலையில் திஷா ரவி ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க போலீஸார் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது
போலீஸார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் " திஷா ரவி காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து டூல் கிட்டை தயாரித்துள்ளார். இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நடக்கும் உலகளாவிய சதியிலும், விவசாயிகள் போராட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கவும் முயன்றுள்ளார்.
இது உண்மையில் டூல் கிட் அல்ல உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுத்து, அமைதியற்ற சூழலை உருவாக்கும் முயற்சியாகும். அதுமட்டுமல்லாமல் தான் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஏற்கெனவே வாட்ஸ்அப் சாட்களையும் மற்ற ஆதாரங்களையும் திஷா ரவி அழித்து விட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக திஷா ரவி அவரின் வாட்ஸ்அப் சாட்களை அழிக்க வேண்டும். அவரின் குற்ற உணர்வுதான் காரணம்" எனத் தெரிவித்தனர்.