பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பதில் அளிக்கத் தலைவர் மறுப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read


பெட்ரோலியம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதில் அளிக்க பாஜக எம்.பி.யும் நிலைக்குழுக் தலைவருமான ரமேஷ் பிதூரி மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒவ்வொரு மாநிலங்களும் விதிக்கும் கூடுதல்வரிதான் காரணம் என்று பாஜக எம்.பி. பிதூரி தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நேற்று நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் மானியங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும், சில்லரை விலையில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90 எட்டிவிட்டதையும், சில நகரங்களில் ரூ.100 கடந்துள்ளது குறித்தும், பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகளிடம் நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் டீசல், பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன என்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பதில் அளித்த நிலைக்குழுத் தலைவர் ரமேஷ் பிதூரி கூறுகையில் " இந்த கூட்டம் முழுமையாக பட்ஜெட் பற்றி ஆலோசிக்க மட்டுமே கூட்டப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேசுவதற்காக அல்ல. ஆதலால், பட்ஜெட் குறித்த விஷயங்கள் மட்டும் பேசலாம், கேள்வி எழுப்பலாம்" எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பிதூரி கூறுகையில் " பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததற்கு மாநில அரசுகள் வரியை அதிகரித்துள்ளன. மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் விலை குறையும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒரு உறுப்பினர் கூறுகையில் " மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் பன்முக வரியிலிருந்து சாமானிய மக்களைக் காக்க பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதுதான் வழி" எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கும் என மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in