

ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரைப் புகழ்ந்து அவரின் பிறந்தநாளில் ட்விட் செய்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்குக் காங்கிரஸ் எம்பி. சசி தரூர், கவுரவ் கோகய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எம்.எஸ்.கோல்வால்கர் பிறந்தநாளான நேற்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேற்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்து ட்விட் செய்திருந்தது. அதில் " மிகப்பெரிய சிந்தனையாளர், கல்வியாளர், மறக்கமுடியாத தலைவர் கோல்வால்கர்.
அவரின் சிந்தனைகள், கொள்கைகள் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கத்தையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கும்" எனத் தெரிவித்திருந்தது. மேலும், இந்த ட்விட்டர் பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலுக்கும் டேக் செய்யப்பட்டது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ட்விட்டர்கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகய் தனது ட்விட்டர் பதிவில், " பிரதமர் மோடியின் தேர்வாக இந்த அமைச்சர் கொண்டு வரப்பட்டு கலாச்சாரத் துறைக்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே நபர்தான், நாடாளுமன்றத்தில் என்னிடம், நாதுராம் கோட்ஸேவை வணங்குவதால் தவறு ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில் " மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ட்விட்டர் கருத்தை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அவர்கள் குறிப்பிட்ட நபர் உண்மையில் பெரிய சிந்தனையாளர், கல்வியாளர் என நம்புகிறீர்களா. ஒய்ஐஆம் ஏ இந்து நூலில் நான் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். இந்திய தேசியக் கொடியை அவமதித்தவரைத்தான் மத்திய அரசு புகழ்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனது கருத்து ஆதரவாக சில லிங்க்குகளையும் சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஊடக ஆலோசகர் நிதின் திரிபாதி பதில் அளித்துள்ளார். அவரின் பதிலில், " இந்தியா என்பது உலகிலேயே பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடு, கலாச்சாரரீதியாகவே பலபரிவுகளைக் கொண்டநாடு.
சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் கலாச்சாரத் துறை அமைச்சகம் பிரதிபலிக்கிறது. எந்த குரலையும், சித்தாந்தங்களையும் மூடிமறைப்பதில் நம்பிக்கையில்லை, அவ்வாறு இருப்பது பாரம்பரியம் இல்லை. அனைத்து கலாச்சாரங்கள், வழிபாடுகள், பாரம்பரியங்கள், மதிப்புகள் ஆகியவற்றுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் இது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் " எனத் தெரிவித்தார்.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கருத்துக்கு ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சத்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பியூரோ உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், முன்னாள் கலாச்சாரத் துறை செயலாளர் ஜவஹர் சிர்கார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.