Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

மகாராஷ்டிராவில் பரவுவது மரபணு மாறிய கரோனாவா?- மாநில அரசு திட்டவட்ட மறுப்பு

கடந்த ஆண்டு செப்டம்பரில் மகாராஷ்டிராவில் நாள்தோறும் சுமார் 20,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்தது. அதன்பின் தினசரி தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திடீரென வைரஸ் பரவல் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தினசரி தொற்று நேற்று முன்தினம் 5,000-ஐ தாண்டியது.

விதர்பா பகுதியில் அமைந்துள்ள அமராவதி, யவத்மால், அகோலா ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கையாக விதர்பாவின் 11 மாவட்டங்களிலும் ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட் டுள்ளன.

இந்நிலையில், தென்ஆப் பிரிக்கா மற்றும் பிரேசில் வகையை சேர்ந்த மரபணு மாறிய கரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் பரவி வருவதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமராவதி, யவத்மால், சதாரா ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை பரிசோதனை செய்தோம். இதில்மரபணு மாறிய கரோனா வைரஸ் பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் எதற்காக, எப்படி வைரஸ் பரவல் அதிகரித்தது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

அகோலா, அமராவதி, யவத்மால் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு முழு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்தஅறிக்கை அடுத்த வாரம் கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வைரஸை கண்டு பயப்பட தேவையில்லை

சென்னை: தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி கூறியதாவது:

வைரஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. காலத்துக்கேற்ப உருமாற்றம் பெறும். இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிய கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதால், அந்த வைரஸ் உருமாற்றிக் கொண்டே இருக்கிறது. இதைத்தான் பிரிட்டன் வைரஸ், தென் ஆப்பிரிக்கா வைரஸ், பிரேசில் வைரஸ் என்கின்றனர். மகாராஷ்டிராவில் பரவும் கரோனா வைரஸ் தொற்றை கண்டு பயப்பட தேவையில்லை. இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதாக தொற்று ஏற்படுகிறது. அதனால், தடுப்பூசி போடும் வரை முதியவர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x