

"வாழ்க்கையில் சரியான பாதையை தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பள்ளி, கல்லூரி காலங்களில் நமக்கு கிடைக்கப்பெறும் அறிவானது விலைமதிக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இந்தக் காலக் கட்டத்தில்தான் படிப்பறிவுடன் சேர்ந்து அனுபவ அறிவையும் நீங்கள் பெற முடியும். ஒருவர்அறிவாளி என்பதால் மட்டும் அவர் வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் என அர்த்தமாகிவிடாது. மாறாக, தமது அறிவை ஒருவர் எந்த வழியில் கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்தே அவரது வெற்றி - தோல்வியை நாம் தீர்மானிக்க முடியும்.
உதாரணமாக, இன்று உலக அளவில் தீவிரவாதத்தை பரப்புவோரும், பயங்கரவாத இயக்கங்களை வழிநடத்துவோரும் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களும் அறிவாளிகள்தான். அதே சமயத்தில், கரோனா போன்றபேரிடர் காலங்களில் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், பிறருடைய உயிரை காப்பாற்ற துடிக்கும் மருத்துவர்களும் அறிவாளிகள்தான். எனவே, யார் எந்த வழியில் தங்கள் அறிவை பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே அவர்களை நாம் மதிப்பிட வேண்டும்.
இன்றைய சூழலில், நம் முன்புஏராளமான வாய்ப்புகளும், பாதைகளும் உள்ளன. அவற்றில் சரியான பாதையை தேர்ந்தெடுப் பதும், தவறான பாதையை தேர்ந்தெடுப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்க போகிறோமா அல்லது தீர்வாக இருக்க போகிறோமா என முடிவெடுக்கும் அதிகாரமும் நம்மிடத்தில்தான் உள்ளது.
உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால், தாய்நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்று உண்மையாக இருந்தால், உங் களால் எடுக்கப்படும் முடிவு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, தீர்க்கமான முடிவை எடுக்க நீங்கள் தயங்கக் கூடாது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.