

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி நேற்று 16-வது நாளாக தொடர்ந்தது.
வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த மனிகா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் கடந்த 13-ம் தேதி தேடுதல் வேட்டை தொடங்கினர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்தோஷ் மகதிக் வீரமரணம் அடைந்தார். இதையடுத்து 22-ம் தேதி நடைபெற்ற மோதலில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு மறுநாள் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இப்பகுதியில் நேற்று 16-வது நாளாக தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மனிகா வனப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது. இங்கு பெருமளவில் ஆயுதம் கொண்ட 3 - 4 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். கடந்த 16 நாட்களில் இவர்களுடன் பலமுறை தொடர்பு ஏற்பட்டதன் மூலம் இது உறுதியாகியுள்ளது. என்றாலும் எங்கள் நடவடிக்கை இதுவரை வெற்றி பெறவில்லை.
இப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். மனிகா வனப் பகுதியில் கடந்த 17-ம் தேதி ராணுவ அதிகாரி மரணம் அடைந்த பிறகு, தேடுதல் வேட்டையில் கமாண்டோ படையும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
“அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால், தீவிரவாதிகள் கண்ணில் படாமல் ஊடுருவிச் சென்று அவர்களை தேடுவது சவாலான பணியாக உள்ளது” என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.