

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிரவாதிகள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''பட்காம் மாவட்டம், பீர்வா பகுதியில் உள்ள ஜானிகம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அந்தப் பகுதியை போலீஸார் கட்டுக்குள் கொண்டுவந்து சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகள் போலீஸாரைக் கண்டதும் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். போலீஸாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு போலீஸார் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிறப்பு போலீஸ் அதிகாரி முகமது அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மன்சூர் அகமது எனும் போலீஸார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாத அமைப்பான அல்-பதார் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் லஷ்கர் இ தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜஹூர் அகமது சம்பா மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு குல்காமில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதில் முக்கியக் குற்றவாளியாக ஜஹூர் அகமது தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.