

மம்தா பானர்ஜி தனது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியை மட்டுமே முன்னிறுத்துவதாக பாஜக தொடர்ந்து புகார் அளித்து வருகிறது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் அங்கு தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதன் பைலான், 24 பர்கனாவின் கூட்டங்களில் நேற்று முதல்வர் மம்தா பேசினார்.
அப்போது தனது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியை தாம் அரசியல் வாரிசாக்குவதாக பாஜக எழுப்பி வரும் புகாரை மறுத்தார். இதற்காக அவர் முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பாக விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து முதல்வர் மம்தா கூறும்போது, ''கடந்த 1999இல் நான் ஹாஸ்ராவில் தாக்கப்படுவதற்கு முன்பாக 1987இல் அபிஷேக் பிறந்தார். எனது தலையிலும், கைகளிலும் கட்டு கட்டப்பட்டிருந்தை அவர் பார்த்தார். தொடர்ந்து அபிஷேக் தன் தாயிடம் எழுப்பிய கேள்விக்கு நான் சிபிஎம் கட்சியினரால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனது அறையில் காங்கிரஸ் கொடியை அசைத்து இன்புறுவதும் அவரது வழக்கம்.
என் மீதான தாக்குதலுக்கு நான் பதிலளிக்காதது ஏன்? எனவும் அபிஷேக் என்னிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பார். இதன் தாக்கமாக அவர் அரசியலில் அதிக தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார்.
இதற்காக நான் அபிஷேக்கிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை. அவரைத் துணை முதல்வராகவோ, முதல்வராகவோ அமர்த்தவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மம்தா மேலும் பல விளக்கங்களையும் அளித்தார். இதில் அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் அரசியலில் இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 1977இல் பிரமர் இந்திரா காந்தி காலத்தில் மம்தாவுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொள்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்சியை அகற்றத் தீவிரம் காட்டி வரும் அமித் ஷா, தொடர்ந்து வாரிசு அரசியலை அவர் வளர்ப்பதாகப் புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதன்முறையாக மம்தா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது