

மேற்கு வங்க அமைச்சர் ஜாகீர் உசேன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேற்கு வங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சரான ஜாகீன் உசேன், கடந்த புதன்கிழமை இரவு முர்ஷிதாபாத் மாவட்டம், நிம்தித்தா ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் கொல்கத்தா ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் 25 பேர்காயம் அடைந்தனர். இதையடுத்து,கொல்கத்தாவில் உள்ளமருத்துவமனையில் ஜாகீன் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் மம்தா கண்டனம்
முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குறிப்பிட்ட கட்சியில் இணையுமாறு ஜாகீர் உசேனுக்கு கடந்த சில மாதங்களாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில் அவர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சிஐடி போலீஸார் விசாரணை நடத்துவார்கள். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.