

தீவிரவாதத்தின் நிழல் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வருவதால் அதை எதிர்த்துப் போரிட புதிய வியூகம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பேசியதாவது:
தீவிரவாதம் என்பது நம்முடைய பிராந்தியத்தின் பிரச்சினை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாரீஸ், அங்காரா, பெய்ருட், மாலி ஆகிய நகரங்களிலும் சமீபத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. மேலும் ரஷ்ய விமானத்தையும் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவங்கள் ஆள் சேர்ப்பு, தாக்குதல் இலக்கு என தீவிரவாதத்தின் நிழல் உலகம் முழுவதும் பரவி வருவதை உணர்த்துவதாக உள்ளன. எனவே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட புதிய வியூகத்தை அமைக்க வேண்டியது அவசியமாகிறது. தீவிரவாதத்தை எந்த ஒரு நாடும் பயன்படுத்தவோ, ஆதரிக்கவோ கூடாது.
குறிப்பாக தீவிரவாத அமைப்பு களுக்கு புகலிடம் அளிக்கவோ, நிதியுதவி அளிக்கவோ, ஆயுதங் களை வழங்கவோ கூடாது. அதேநேரம், நம்முடைய சமூகத்துக் குள்ளும் இளைஞர்களுடனும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவேகானந்தர் சிலை திறப்பு
கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில், சுவாமி விவேகானந்தரின் வெண்கல சிலையை (12 அடி) பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த 2000 இந்தியர்கள் மத்தியில் அவர் பேசும்போது,
‘ஒரு ஆசியா’ என்ற கருத்தை முதலில் முன்மொழிந்தவர் விவேகானந்தர். அதைத்தான் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் இன்று பேசிக்கொண்டிருக் கின்றன என்றார்.
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, “இங்குள்ள இந்திய கலாச்சார மையத்துக்கு இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் தளபதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்படும். உங்களுடைய ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் நேதாஜியுடனும், இந்திய ராணுவத்திலும் சேர முன்வந்தனர்” என்றார்.
தமிழில் பேசிய மோடி
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி 45 நிமிடங்கள் பேசினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கிய அவர், “உங்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது” என்று சில வாக்கியங்களை தமிழில் பேசினார். பின்னர் ஆங்கிலத்தில் பேசிய மோடி, திருவள்ளுவரின் “முகநக நட்பது” என்று தொடங்கும் நட்பு பற்றிய ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.