Last Updated : 28 Nov, 2015 04:38 PM

 

Published : 28 Nov 2015 04:38 PM
Last Updated : 28 Nov 2015 04:38 PM

ஊழலை ஒழிப்பதில் கேஜ்ரிவாலுக்கு உண்மையான அக்கறை இல்லை: பிரஷாந்த் பூஷன் காட்டம்

ஊழலுக்கு எதிரான வலுவான ஜன் லோக்பால் மசோதா அமைவதை அரவிந்த் கேஜ்ரிவால் விரும்பவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் கடுமையாகச் சாடியுள்ளார்.

காந்தியவாதி அண்ணா ஹசாரே முன்னெடுத்த ஜன் லோக்பால் வரைவை கேஜ்ரிவால் நீர்த்துப் போகச் செய்து ‘நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய மோசடியை செய்துள்ளார் கேஜ்ரிவால்’ என்று பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது குறித்து நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைக் கூட்டிய பிரசாந்த் பூஷன் கூறும்போது, “இந்திய வரலாற்றில் எந்த ஒரு அரசியல்-சமூக செயல்பாட்டாளரும் செய்யாத அளவுக்கு மக்களிடம் மோசடி செய்துள்ளார் (கேஜ்ரிவால்).

அதாவது, இவரது செய்கையினால், மத்திய அரசு இனி லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாததை உறுதி செய்துள்ளார் அவர். வலுவான லோக்பால் அமைய கேஜ்ரிவால் விரும்பவில்லை” என்று கூறியதோடு, டெல்லி அரசினால் இன்னமும் வெளியிடப்படாத ஜன் லோக்பால் திட்ட வரைவின் சில பிரிவுகளை வாசித்துக் காண்பித்தார் பிரசாந்த் பூஷன்.

வரைவில் இடம்பெற்றுள்ள லோக்பால் கமிட்டியின் நியமனங்கள் மற்றும் நீக்குதல் நடைமுறைகளை வாசித்துக் காண்பித்த பிரசாந்த் பூஷன், அந்த நடைமுறைகளை கடுமையாக கேள்விக்குட்படுத்தினார். அதாவது லோக்பால் மசோதா நடைமுறைகளைக் கண்காணிக்கும் நபரை டெல்லி அரசுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது டெல்லி முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு லோக்பால் கமிட்டியை நியமனம் செய்வர் என்றும் ஆனால் கமிட்டியிலிருந்து நீக்கும் நடைமுறை சட்ட மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் பெரும்பான்மை முடிவின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று மசோதா வரைவில் உள்ளது.

இது மகாஜோக்பால்:

முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான சாந்திபூஷன் கூறும்போது, "கேஜ்ரிவால் ‘ஜோக்பால்’ என்று கேலி செய்த மத்திய அரசின் லோக்பால் சட்டம், இந்த வரைவு ஜன் லோக்பாலை விடவும் வலுவாக உள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. இது ‘மகாஜோக்பால்’. கேஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

டெல்லி அரசின் லோக்பால் மசோதாவில், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களும் இதற்குக் கட்டுப்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் மீண்டும் மோதல் போக்கை உருவாக்குவதற்கே இது வழிவகுக்கும். லோக்பால் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளதன்மூலம் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காது.

“நாங்கள் இதுவரை உருவாக்கிய அனைத்து வரைவு லோக்பால் திட்டத்திலும் மாநில லோக் ஆயுக்தாக்களுக்கு இத்தகைய விரிவு படுத்தப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை” என்று சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் தவறான புகார் கொடுப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இது புகார் தர முன்வருவதைத் தடுக்கவே வகை செய்யும். எனவே, வலுவான லோக்பால் மசோதாவை இயற்றும் எண்ணம் கேஜ்ரிவாலுக்கு இல்லை. முரண்பட்ட இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றிவிட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய அரசு மீது பழிபோட கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x