முதலில் ராஜஸ்தான்: இன்று மத்தியப் பிரதேசம்; பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்த நிலையில் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது

பெட்ரோல் விலை தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 34 பைசாவும், டீசல் 32 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிராண்டட் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று 100 ரூபாயைக் கடந்துள்ளது. ஆனால், ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மற்றும் மத்தியப் பிரதேச்தில் சாதாரண பெட்ரோல் விலையே லிட்டர் 100 ரூபாயைக் கடந்து இன்று விற்பனையாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனுப்பூர் நகரில் சாதாரண பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100.25 ஆகவும், டீசல் ரூ.90.35 ஆகவும் இன்று விற்பனையாகிறது.

ஒவ்வொரு மாநில அரசுகளும் விதிக்கும் வாட் வரிக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை வேறுபடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 33 சதவீதம் வரி, ஒரு சதவீதம் செஸ் விதிக்கப்படுகிறது. டீசல் மீது 23 சதவீதம் வரி, ஒரு சதவீதம் செஸ் விதிக்கப்படுகிறது.

இன்றைய விலை உயர்வால் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.89.99 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.80.27ஆகவும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.32 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.87.32 ஆகவும் விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த 10 நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.2.93 பைசாவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.3.14 பைசாவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் விதிக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66 பைசாவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in