

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மிகப்பெரிய சதி நடந்தது என்பதை மறுக்க முடியாது எனக் கூறிய உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை முடித்து வைத்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகய்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறினார். இந்தப் புகார் குறித்து தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகய் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதற்கிடையே வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராகச் சதி நடக்கிறது. தீர்ப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தியும், ரஞ்சன் கோகய்க்கு எதிராக நடந்த சதியில் வாட்ஸ் அப் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு ஆவணங்களைக் கைப்பற்ற முடியவில்லை.
மேலும், பட்நாயக் தலைமையிலான குழு, மத்திய உளவுத்துறைக்கு எழுதிய கடிதத்தில், என்ஆர்சி சட்டம் தொடர்பாக அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகய் சில கடினமான முடிவுகளை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு எதிராகச் சில சதிகள் நடந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதியது.
இந்நிலையில் இந்த வழக்கைத் தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக பட்நாயக் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில் எந்தவிதமான மின்னணு ஆவணங்களையும் கைப்பற்ற முடியவில்லை.
ஆனால், ரஞ்சன் கோகய்க்கு எதிராகப் பெரிய அளவில் சதி நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்று பட்நாயக் தெரிவித்துள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆதலால், இந்த வழக்கின் விசாரணையை முடித்து வைக்கிறோம்" எனத் தெரிவித்தது.