

பெட்ரோல் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 25 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து, ரூ.100.13க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் வழிப்பாதை, சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றைப் பிரதமர் மோடி இன்று (17.2.2021) காணொலிக் காட்சி மூலமாக நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விழாவில் அவர் பேசும்போது, ''2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா தன்னுடைய எண்ணெய்த் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. எரிவாயுத் தேவையில் 53 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நாம் ஏன் இறக்குமதியை அதிக அளவில் நம்பியுள்ளோம்? நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், முன்கூட்டியே (முந்தைய அரசுகள்) இந்த விவகாரம் குறித்துக் கவனம் செலுத்தி இருந்தால், நம்முடைய நடுத்தரக் குடும்பத்தினர் யாரும் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.
எங்களின் அரசு, நடுத்தரக் குடும்பத்தினர் குறித்து யோசிக்கிறது. அதனால்தான் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறோம்'' என்று பிரதமர் தெரிவித்தார்.
கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் மூலம் பெட்ரோல் இறக்குமதி செய்யப்படும் அளவு குறைவதோடு, விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66 பைசாவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.