

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியாக ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இதில் டீசல் மீதான விலை மட்டும் 820 சதவீதமும், பெட்ரோல் விலை 258 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து, தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ராஜஸ்தானில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது. டீசல் விலை ரூ.92.13 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், வரியைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த விலை உயர்வு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் ஹேரா நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கடந்த 6 ஆண்டுகளில் 8 மாதங்களாக மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்துள்ளது. இதில் பெட்ரோல் விலை மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் லிட்டருக்கு 23.78 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 28.37 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதில் டீசல் விலை மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 820 சதவீதமும், பெட்ரோல் விலை 258 சதவீதமும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரி செலுத்தி சாமானிய மக்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடியைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு கொள்ளையடித்துள்ளது. உடனடியாக இந்தக் கூடுதல் வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட உற்பத்தி வரியைக் குறைத்தாலே, பெட்ரோல் லிட்டர் ரூ.61.92 ஆகக் குறைந்துவிடும், டீசல் லிட்டர் ரூ.47.51 ஆகச் சரிந்துவிடும். நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானியரும் இந்தச் சுமையிலிருந்து விடுபடத் தகுதியானவர்கள்.
இந்த ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு எந்தத் துறையிலாவது செலவு செய்ததைப் பார்க்கிறோமா? வேளாண் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, அரசு ஊழியர்கள் அல்லது ஏதேனும் துறையில் அரசு செலவிட்டுள்ளதா? அப்படியென்றால் இதற்கு அர்த்தம் என்ன?
அரசின் கவனக்குறைவு, ஒட்டுமொத்த தவறான நிர்வாகம், நிர்வாகமின்மையைத்தான் குறிக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் பணியாற்றும் அரசுக்காக எதற்காக சாமானிய மக்கள் இந்த விலையை அளிக்க வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து அகலும்போது, பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 108 அமெரிக்க டாலராக இருந்தது. டெல்லியில் அப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71.51 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.57.28 ஆகவும் இருந்தது.
ஆனால், 2021,பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 54.41 அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், பெட்ரோல் விலை டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.89.29 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.79.70 ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களை அடிக்கடி கிளப்பி, தங்களுடைய ஆட்சியின் மீதான கோபம், அச்சம், தோல்வி ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பியே மத்திய அரசு வைத்திருக்கிறது''.
இவ்வாறு பவன் ஹேரா தெரிவித்தார்.