

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி காஷ்மீர் மாநிலத்துக்கு சனிக்கிழமை செல்கிறார். அமைச்சராகப் பதவியேற்ற பின் அவர் முதல்முறையாக காஷ்மீருக்குச் செல்லும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர், பிம்பர்காலி, கெரி பகுதிகளைக் குறிவைத்து காலை 7.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ட்விட்டரில்,‘‘பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. பின்னர் பீரங்கி குண்டுகளை வீசியது. இவை குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை’’என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி
பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் காஷ்மீர் வருகையின்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறியிருப்பது குறித்து அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், இது தற்செயலாக நடந்ததா என்று வினவியுள்ளார்.
ஓராண்டில் 149 முறை அத்துமீறல்
2013-ம் ஆண்டில் 149 முறையும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 19 முறையும் பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களால் கடந்த ஓராண்டில் 12 இந்திய வீரர்கள் பலியாயினர். 41 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரதமருடன் ராணுவ தலைமைத் தளபதி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவரைச் சந்தித்த தலைமைத் தளபதி விக்ரம் சிங், ராணுவத்தின் செயல்பாடுகள், காஷ்மீர் எல்லை நிலவரம் குறித்து விவரித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ள லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் ஆகியோர் உடன் இருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மதியம் 12.40 வரை நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு நிலவரம், வடகிழக்கு மாநிலங்களின் நிலவரம், ராணுவத்தின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால தேவைகள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் பிரதமரிடம் தலைமைத் தளபதி விக்ரம் சிங் எடுத்துரைத்தார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.