Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

லடாக்கின் பான்காங் ஏரி பகுதியிலிருந்து இந்திய, சீன படைகள் வேகமாக வாபஸ்

புதுடெல்லி

லடாக்கின் பான்காங் ஏரி பகுதியிலிருந்து சீன படைகள் அதிவேகமாக வாபஸ் பெறப்பட்டு வருகிறது.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண உடன்பாடுஎட்டப்பட்டது. இதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய, சீன வெளியுறவுத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். ராணுவ, ராஜ்ஜிய ரீதியான பேச்சுவார்த்தையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து கடந்த 11-ம் தேதிமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, "கடந்த 10-ம் தேதி முதல்லடாக்கின் பான்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. சீன வீரர்கள் 'பிங்கர் 8' நிலைக்கும் இந்திய வீரர்கள் 'பிங்கர் 3' நிலைக்கும் திரும்புகின்றனர்" என்றார்.

200 சீன டாங்கிகள் வாபஸ்

இதன்படி பான்காங் ஏரிப் பகுதிகளில் இருந்து சீன படைகள் அதிவேகமாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. சுமார் 200 சீன டாங்கிகள் 8 மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன. சீன ராணுவம் அமைத்திருந்த ஹெலிபேடுகள், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. கூடாரங்கள், புதிய கட்டுமானங்களும் அகற்றப் பட்டுள்ளன. எல்லையில் இருந்து சீன படைகள் வெளியேறும் வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சீன டாங்கிகள், படை வீரர்கள் திரும்பி செல்வது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, "சீன படைகள் அதிவேகமாக வாபஸ் பெறப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் சீன படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று நம்புகிறோம். இரு நாடுகளின் படைகளும் அவரவர் எல்லை நிலைகளுக்கு திரும்பிய பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றனர்.

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி யில், "ஒரே நாளில் எல்லையில் இருந்து சீன படைகளை வாபஸ் பெற முடியும். தேவைப்பட்டால் ஒரே நாளில் எல்லையில் படைகளை குவிக்கவும் முடியும். இந்திய படைகள் மெதுவாகவே வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு சில தொழில்நுட்ப காரணங்களை கூறுகின்றனர். இதை ஏற்றுக் கொள்கிறோம். எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் படைகளை வாபஸ் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, "ராணுவ, வர்த்தக ரீதியாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவுடன் மோதுவது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு லடாக் விவகாரத்தில் சீனா பின்வாங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x