

வீட்டில் டிவி, குளிர்சாதன பெட்டி,2 சக்கர வாகனம் வைத்திருந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கான (பிபிஎல்) ரேஷன் அட்டை ரத்து என்ற கர்நாடக அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேத் கத்தி, பெலகாவியில் நேற்று முன்தினம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் 60 சதவீதத்துக் கும் அதிகமான ரேஷன் அட்டை பயனாளர்கள் தவறான வருமான கணக்கு சான்றிதழை காட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கான (பிபிஎல்)ரேஷன் அட்டையை பெற்றுள்ளனர். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் அதிகமாக இருப்போரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோராக கருத முடியாது.
அதேபோல வீட்டில் டிவி, குளிர்சாதன பெட்டி, இருசக்கர வாகனம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து தங்களது பிபிஎல் ரேஷன் கார்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும். 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்போரும் இந்த அட்டையை பயன்படுத்தக் கூடாது. ஏப்ரல் இறுதிக்குள் பிபிஎல்அட்டைகளை திருப்பி ஒப்படைக்காத பயனாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் யூ.டி.காதர் கூறும்போது, "இந்த அறிவிப்பு சர்வாதிகார தன்மை கொண்டது. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அவர்களை வதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் டிவி பார்ப்பதையும், இரு சக்கர வாகனத்தில் செல்வதையும் பிடிக்காமலேயே அமைச்சர் உமேஷ் கத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிபிஎல் அட்டைகளை திரும்பப் பெற்றால் லட்சக்கணக்கான ஏழைகள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே அரசு உடனடியாக இந்தஉத்தரவை திரும்ப பெற வேண்டும்" என்றார்.