அன்புமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அன்புமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
2 min read

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004 - 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். இவரது பதவிக் காலத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டின்பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. மேலும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

போதிய ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு பரிந்துரைகளை மீறி, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அன்புமணி அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ரோஹில்கண்ட் கல்லூரி வழக்கில் அன்புமணி, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை துணைச் செயலாளர் கே.வி.எஸ்.ராவ், கல்லூரி முதல்வர் கே.கே.அகர்வால் ஆகியோர் மீதும், இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி வழக்கில் அன்புமணி, ராவ் தவிர கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ்.பதாரியா, கல்லூரி ஊழியர்கள் நிதின் கோத்வால், பவன் பண்டாரி ஆகியோர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட்டு சதி, லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபடுதல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் புரிந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி, டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ஜெயின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை துவங்கியது.

மேல் முறையீடு

இதை எதிர்த்து அன்புமணி சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 20-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அன்புமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ‘மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சிபிஐ நீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்த மனு மீது விசாரணை முடியும் வரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், வி.கோபாலகவுடா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அன்புமணியின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in