

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே 2 பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த தேவம்மா (55) என்கிற விவசாய பெண்மணி கடந்த மாதம் 17-ம் தேதி காணாமல் போனார். இவர் சில தினங்களுக்கு பிறகு மைசூரு மாவட்ட வனப்பகுதியில் புலியால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டது தெரியவந்தது. இதேபோல மைசூரு மாவட்டம் ஹெச்.டி.கோட்டையை சேர்ந்த விவசாயி சிவண்ணா ( 50) கடந்த 16-ம் தேதி வயலில் புலி தாக்கியதில் உயிரிழந்தார்.
இதனால் ஹெச்.டி. கோட்டையை சுற்றியுள்ள கிராமங் களில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்தனர். மேலும் அதிகாரி களிடமும் முறையிட்டனர்.
இதையடுத்து ஆட்கொல்லி புலியை கொல்ல, மத்திய வனத் துறையிடம் மாநில வனத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஹெச்.டி. கோட்டை - சாம்ராஜ் நகர் இடையேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹொலே காட்டை சுற்றியுள்ள பகுதியில் புலியை வேட்டையாடுவதற்காக வனத்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட அதி நவீன கண் காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
வனப்பகுதியில் 5 முனைகளில் 5 கும்கி யானைகளுடன் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆட்கொல்லி புலி நேற்று முன்தினம் மாலை பந்திப்பூர் வனப்பகுதியில் தென் பட்டது. அதை சுடமுயன்ற வனக் காவலர் சிவக்குமார் மீது புலி பாய்ந்து தாக்கியது.
இதையடுத்து வனத்துறை அதிகாரி ரவி ரல்ஃப், புலியை சுட்டுக்கொன்றார். உயிருக்கு ஆபத் தான நிலையில் இருந்த வனக் காவலர் சிவக்குமார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பந்திப்பூர் வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட புலிக்கு நேற்று பிரேதப் பரிசோ தனை நடத்தப்பட்டு, உடல் எரிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இந்நிலையில் புலி கொல்லப் பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“மனிதர்கள் - விலங்குகள் இடையிலான மோதலுக்கு காட்டை அழிப்பதும்,ஆக்கிரமிப்பதுமே முக்கிய காரணம்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட புலியை கொல்வதால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.