அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து பெண்கள் பணியாற்றும் அரசு அலுவலகங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரம்: கேரள அரசு உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், நாப்கின்களை எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ கேரள அரசு உத்தரவி்ட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக அரசு புதிய சுகாதாரக் கொள்கையைக் கொண்டு வந்ததது.

இதன்படி,மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவிகள் பயன்படுத்துவதற்காக இலவச நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ உத்தரவிட்டது.

இப்போது பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரங்களை நிறுவ சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பல்வேறு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“ பெண்கள் பணியாற்றும் அரசு அலுவலகங்கள் அவர்கள் அணுகுவதற்கு இலகுவாகவும், சூழலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதன்படி பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரம் நிறுவப்படும்.

முதல்கட்டமாக பெரிய அரசு அலுவலகங்களிலும், அதைத்தொடர்ந்து அதிகமான பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களிலும் இந்த நாப்கின் வழங்கும் எந்திரம், எரிக்கும் எந்திரம் நிறுவப்படும். இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் 520 கி.மீ தொலைவுக்கான நீர்வழிப்பாதைக்கான முதல்கட்ட திட்டத்தை நேற்று காணொலி மூலம் அறிமுகம் செய்தார்.

முதல்கட்டமாக 311 கி.மீ தொலைவுக்கு நீர்வழிப்பாதை நேற்று தொடங்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்திலிருந்து கொல்லம், கொட்டாபுரம் வழியாக வெளி நகரம் வரை இந்த படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக புதிதாக சூரிய ஒளியில் இயங்கும் படகுகள் வாங்கப்பட்டுள்ளன.

மக்கள் பயணிக்கும் இந்த படகுகளில் சிசிடிவி கேமிராக்கள், தவறி விழாமல் இருக்க வலைகள், உயிர்காக்கும் கவச உடைகள், போன்றவை படகில் வழங்கப்பட்டுள்ளன.


கேரளாவின் தெற்குப் பகுதி மாவட்டங்களில் இருக்கும் ஏரிகள், பாலங்களைக் கணக்கிட்டும், மலபார் மண்டலத்தில் உள்ள நீர்வழிப்பாதையைக் கணக்கிட்டும் 3 கட்டங்களாக நீர்வழிப் போக்குவரத்தை செயல்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in