ரூ.5-க்கு சாதம், பருப்பு, காய்கறி, முட்டையுடன் சாப்பாடு: மேற்கு வங்கத்தில் ’மா கிட்சன்ஸ்’ தொடக்கம்

ரூ.5-க்கு சாதம், பருப்பு, காய்கறி, முட்டையுடன் சாப்பாடு: மேற்கு வங்கத்தில் ’மா கிட்சன்ஸ்’ தொடக்கம்
Updated on
1 min read

தமிழகத்தின் அம்மா உணவகம், கர்நாடகாவின் இந்திரா கேன்டீன் வரிசையில் மேற்குவங்கத்தில் மானிய விலையில் உணவு அளிக்கும் ’மா கிட்சன்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு சாதம், சமைத்த காய்கறிகள், பருப்பு, ஒரு முட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, "மா கிட்சன்ஸை தொடங்கிவைப்பதில் பெருமை கொள்கிறேன். அம்மா இருக்குமிடமெல்லாம் நன்மையும் இருக்கும். அனைத்து தாய்மார்களுக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்" என்றார்.

சமீபத்தில் துவாரே சர்க்கார் என்ற திட்டத்தை மம்தா தொடங்கிவைத்தார். அதன் மூலம் அரசு சேவைகளை வீட்டு வாயிலுக்கே கொண்டு செல்ல வழி செய்தார். அதேபோல் ஸ்வஸ்த்ய சாதி என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் மம்தா தொடங்கி வைத்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மம்தாவின் மா கிட்சன்ஸ் திட்டத் தொடக்கம் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பாஜக மம்தாவின் மா கிட்சன் திட்டத்தை வெகுவாக விமர்சித்துள்ளது. இது குறித்து மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பேசும்போது, "மேற்குவங்க மாநில மக்களுக்கு உணவு வாங்கக்கூட பணம் இல்லை. அதனாலேயே மா கேன்டீன் நடத்துகிறார். தனது தோல்வியை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்குவங்க மக்கள் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டனர்" என்று விமர்சித்துள்ளார்.

ஆனால், ஆரம்ப நாளில் ’மா கிட்சன்’ உணவகங்களுக்கு வந்த பயனாளிகளோ இது தங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் தேர்தலுக்குப் பின்னரும் இத்திட்டம் தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in