பிஹாரில் மெகா கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முழு ஆதரவு: சட்டப்பேரவை குழு தலைவராக நிதிஷ் தேர்வு

பிஹாரில் மெகா கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முழு ஆதரவு: சட்டப்பேரவை குழு தலைவராக நிதிஷ் தேர்வு
Updated on
2 min read

பிஹாரில் மெகா கூட்டணியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிஹாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அண்மையில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகள் நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் என்று நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாட்னா ராஜ்பவனில், மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை நிதிஷ்குமார் நேற்று சந்தித்தார். அப்போது நிதிஷ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். மேலும் தற்போதைய பேரவையை கலைப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பொறுப்பு முதல்வராக நீடிக்குமாறு அவரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள புதிய எம்எல்ஏக்கள் கூட்டம், நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு நிதிஷ்குமார் பெயரை தற்போதைய அரசின் மூத்த அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ் முன்மொழிந்தார். உடனே மற்ற உறுப்பினர்கள் அதை வழிமொழிந்தனர்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பொதுச் செயலாளர் கே.சி. தியாகி, கட்சியின் மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் பின்னர் மெகா கூட்டணியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் பிற்பகலில் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவை குழுத் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஆளுநரை நிதிஷ்குமார் மீண்டும் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நிதிஷ்குமார் வரும் 20-ம் தேதி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அவருடன் 36 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்களாக, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 16 பேர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 15 பேர் மற்றும் காங்கிரஸ் சார்பில் 5 பேர் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

இதனிடையே பாட்னாவில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் 27 புதிய எம்எல்ஏக்கள், 4 எம்எல்சிக்கள் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் பேரவை தலைவரை தேர்வு செய்யவும், நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் சேருவது தொடர்பாக முடிவு எடுக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளர் சி.பி.ஜோஷி, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“டெல்லியில் வரும் 19-ம் தேதி, பிஹார் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சோனியாவும் ராகுல் காந்தியும் கலந்துரையாட உள்ளனர். அப்போது நிதிஷ்குமார் அரசில் சேருவது தொடர்பாக அவர்கள் முடிவு செய்வார்கள்” என்றார் அவர்.

பிஹாரில் நீண்ட காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் 27 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று மகிழ்ச்சியில் திளைத்தது. முந்தைய பேரவையில் இக்கட்சி சார்பில் 5 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

லாலுவின் மகளுக்கு அமைச்சர் பதவி

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 80 எம்எல்ஏக்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் 5 எம்எல்ஏக்களுக்கு 1 அமைச்சர் என்ற அடிப்படையில் லாலுவின் கட்சிக்கு 16 அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பிஹார் சட்டப்பேரவைக்கு லாலுவின் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி, கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அண்மையில் நடந்த பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.இந்நிலையில் பிஹார் அமைச்சரவையில், ஆர்ஜேடி ஒதுக்கீட்டில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், மகள் மிசா பாரதி ஆகியோருக்கு இடம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, இளைய மகன் தேஜஸ்விக்கு லாலு துணை முதல்வர் பதவி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in