Published : 16 Feb 2021 03:11 AM
Last Updated : 16 Feb 2021 03:11 AM

பெங்களூருவில் சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு அசைவ உணவு டெலிவரி செய்த நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஷ்ணு நாகேந்திரா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மதிய உணவுக்கு, ‘கேப்ரீசே கீனோ’ என்றழைக்கப்படும் ஒரு வகை தானியத்தில் செய்யப்பட்ட சைவ உணவுக்கு ‘பிரஷ்மெனு’ என்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்தார். அதன்படி, ‘சைவம்’ என்று அச்சிடப்பட்ட அட்டை பெட்டியில் உணவு டெலிவரி செய்யப்பட்டது.

அதை பிரித்து விஷ்ணு சாப்பிட்ட போது, அது சிக்கனில் தயாரிக்கப்பட்ட உணவு என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அதற்கு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். மேலும், ஓரிரு நாட்களில் உணவுக்காக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பிவிடுவதாக கூறியுள்ளனர்.

இதில் கோபம் அடைந்த விஷ்ணு மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் 2018 அக்டோபர் 1-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ‘பிரஷ்மெனு’ ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி வரும் ‘புட்விஸ்டா இந்தியா பிரைவேட் லிமிடெட்’டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘விஷ்ணு சொல்வது பொய். அவருக்கு அசைவம் டெலிவரி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை’’ என்று வாதாடினார். ஆனால், இந்தப் பிரச்சினை தொடர்பாக நிறுவனத்துக்கு விஷ்ணு அனுப்பிய இ மெயில், அதற்கு மன்னிப்பு கேட்டு நிறுவனம் அனுப்பிய பதில் இ மெயில் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கை 28 மாதங்களாக விசாரித்து வந்த மாவட்ட நுகர்வார் குறை தீர்ப்பாயம், ‘‘இ மெயில் ஆதாரங்கள் தவறை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விஷ்ணுவுக்கு ‘பிரஷ்மெனு’ நிறுவனம் ரூ.5,000 நஷ்ட ஈடு, வழக்கு செலவு ரூ.5,000, உணவுக்காக அவர் செலுத்திய ரூ.210 என மொத்தம் 10,210 ரூபாயை வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x