இந்திய வரைபட தகவல்களை தாராளமயமாக்க அரசு திட்டம்: எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைத் திறக்கும் என பிரதமர் ட்வீட்

இந்திய வரைபட தகவல்களை தாராளமயமாக்க அரசு திட்டம்: எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைத் திறக்கும் என பிரதமர் ட்வீட்
Updated on
1 min read

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயற்கை ஆதாரங்கள், கனிம வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த புள்ளிவிவரங்களும் தகவல்களும் மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. இந்தியா டிஜிட்டல் துறையை ஊக்குவித்துவரும் நிலையில், இடம் மற்றும் இயற்கை ஆதாரங்கள் குறித்த தகவல்கள், புள்ளிவிவரங்களை ஒருங்கிணைக்கும் தேசிய வரைபடக் கொள்கையில் தற்போதுள்ள தடைகளை நீக்கி, இந்திய நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி நிலப்பரப்பு, இயற்கை வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தகவல்கள், புள்ளிவிவரங்களை எளிதில் கிடைக்க செய்வதற்கான கொள்கை சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை முன்கூட்டியே தவிர்க்க முடியும்.

உலகம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய தகவல்கள் இந்தியாவில் மட்டும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்திய நிலப்பரப்பு மற்றும் இயற்கை சார்ந்த தகவல்கள், புள்ளிவிவரங்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில் தேசிய வரைபடக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். தற்போதுள்ள கொள்கையின்படி வரைபடங் களை உருவாக்குதல், திரட்டுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற் றில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் உள்ளன. தொழில் நிறுவனங்கள் இதற்கு பல்வேறு ஒப்புதல், அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தொழில்தொடங்குவதில் பல்வேறு சிக்கல்களையும் சந்திக்கிறார்கள்.

எனவேதான் தற்போது கொள்கை ரீதியான மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள் இனி இந்திய வரைபட புள்ளிவிவரங்களை, தகவல்களை சேகரிக்க, உருவாக்க, பதிப்பிக்க, சேமிக்க எந்தத் தடையும் இருக்காது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியாவை வளர்த்தெடுக்கும் பயணத்தில் இந்திய வரைபடக் கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்ட் அப், தனியார் துறை, பொதுத் துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் இதன் மூலம் பெரிய அளவில் பயனடையும். இதன்மூலம் வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கணிசமாக உயரும். முக்கியமாக விவசாயிகளும் இதன் மூலம் பெரும் பலனடைவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in