Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

ட்விட்டர் டூல்கிட் விவகாரத்தில் மும்பை பெண் வழக்கறிஞர் உட்பட 2 பேருக்கு பிடி ஆணை

புதுடெல்லி

ட்விட்டர் டூல்கிட் விவகாரம் தொடர்பாக மும்பை பெண் வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், சுற்றுச்சூழல் ஆர்வலர் சாந்தனு ஆகியோரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க் கடந்த 4-ம் தேதி ட்விட்டர் வாயிலாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் டூல்கிட் ஒன்றையும் பகிர்ந்தார். `டூல்கிட்' என்பது குறிப்பிட்ட ஒரு விஷயம் தொடர்பான வழிகாட்டும் ஆவணமாகும்.

இதுகுறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, டூல்கிட் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான கனடாவைச் சேர்ந்த `பொயட்டிக் ஜஸ்டிஸ் ஆப் பவுண்டேசன்' இருப்பது தெரியவந்தது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு தெரிவிக்க கிரேட்டா தன்பர்க், பாப் பாடகி ரிஹானா உள்ளிட்டோருக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் பெருந்தொகை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கிரேட்டா தன்பர்க், டூல்கிட்டை பகிர்வதற்கு முன்பாகவே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அதிகமாகப் பகிர்ந்துள்ளனர். இதன்காரணமாகவே கடந்த ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

தலைமறைவு

ட்விட்டர் டூல்கிட் விவகாரத்தில் சுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கின் இந்திய பிரதிநிதியான பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி (21) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கிரேட்டா தன்பர்க்குடன், திஷா ரவி வாட்ஸ்அப்பில் பல்வேறு தகவல்களை பரிமாறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதே டூல்கிட் விவகாரத்தில் தொடர்புடைய மும்பையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாந்தனு ஆகியோரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இருவருக்கும் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நிகிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 11-ம் தேதி முதல் டெல்லி போலீஸார், மும்பையில் முகாமிட்டுள்ளனர். ஆனால் நிகிதா தலைமறைவாகிவிட்டார். மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அவர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட சாந்தனு குறித்த விவரங்களை டெல்லி போலீஸார் வெளியிடவில்லை. அவரும் தலைமறைவாக உள்ளார்.

காணொலியில் சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் தலைவர்

டெல்லி போலீஸ் சைபர் பிரிவு மூத்த அதிகாரி பிரேம் நாத் கூறியதாவது:

டிராக்டர் பேரணி தொடர்பாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து பெங்களூரு சமூக ஆர்வலர் திஷா ரவி, மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் உள்ளிட்டோருடன் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான 'பொயட்டிக் ஜஸ்டிஸ் ஆப் பவுண்டேசனின்' இணை நிறுவனர் மோ தலிவால் ஜூம் செயலி மூலம் காணொலியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கனடாவை சேர்ந்த புனீத் என்ற பெண், இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்பட்டுள்ளார். காணொலி கூட்டத்தில் பல்வேறு சதித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை திஷா ரவி தயார் செய்து டெலிகிராம் செயலி மூலம் கிரேட்டா தன்பர்க்குக்கு அனுப்பியுள்ளார். டூல்கிட்டை பரப்ப கடந்த டிசம்பர் 6-ம் தேதி திஷா ரவி வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கியுள்ளார். பின்னர் அந்த குழுவை அழித்துவிட்டார். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திஷா ரவி, நிகிதா ஜேக்கபின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் நாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x