பஞ்சாப் பல்கலை.யில் 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் தமிழ்த் துறை: தமிழக அரசு நிதி உதவி அளிக்க முன்வந்தும் பலன் இல்லை

பஞ்சாப் பல்கலை.யில் 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் தமிழ்த் துறை: தமிழக அரசு நிதி உதவி அளிக்க முன்வந்தும் பலன் இல்லை
Updated on
1 min read

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் துறை 20 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இதற்காக நிதி ஒதுக்கி உதவி பேராசிரியரை நியமிக்க தமிழக அரசு முன்வந்தபோதும் பலன் கிடைக்கவில்லை.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் தலைநகர் மற்றும் யூனியன் பிரதேசமாகவும் இருப்பது சண்டிகர். அங்கு 1941 முதல் பஞ்சாப் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இதன் பல கல்விக் குழுக்களின் உறுப்பினராக குருதாஸ்பூரின் காங்கிரஸ் எம்.பி. இ.சி.சர்மா இருந்தார். இவருக்கு தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறை தொடங்கப்பட்டது. முதலில் தொடங்கிய தமிழைத் தவிர மற்ற 3 மொழிகளுக்கும் கூட விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இங்கு 1967-ம் ஆண்டு ஜூன் முதல் தமிழ் துறை விரிவுரையாளராக முனைவர் கு.ராமகிருட்டினன் பணியாற்றி 2001-ல் பேராசிரியராக ஓய்வுபெற்றார். இவருக்கு பின் யாரும் நியமிக்கப்படாததால், தென்னிந்திய மொழிகள் துறை பெயரளவிலேயே உள்ளது. இதற்காக ஒதுக்கப்படும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில அரசுகளின் வேறு துறைகளுக்கு மாற்றி பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்த செய்தி கடந்த, 2019- ம் ஆண்டு ஏப்ரல் 6-ல் பேராசிரியர் கு.ராமகிருட்டினன் பேட்டியுடன் விரிவாக வெளியானது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி 2019-ம் ஆண்டு ஜூலை 20-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் பணிக்காக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்தார்.

இந்த தகவல் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து இதுவரையில் தமிழக அரசுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்துடன், தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகள் துறையும் நிரந்தரமாகவே மூடப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வட்டாரம் கூறும்போது, ``தமிழக அரசின் அறிவிப்புக்கு பின் மீண்டும் தமிழ் போதிக்க துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஒரு கூட்டமும் நடைபெறாத நிலையில் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தற்போது, இந்தி, சம்ஸ்கிருதம் தவிர மற்ற எந்த இந்திய மொழிகளுக்கான கல்வி இல்லாதது மிகவும் கவலையைத் தருகிறது'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in