Last Updated : 15 Feb, 2021 01:54 PM

 

Published : 15 Feb 2021 01:54 PM
Last Updated : 15 Feb 2021 01:54 PM

பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை முதல் அமர்வில் 100 சதவீத செயல்திறனை எட்டியது

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்

புதுடெல்லி

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் மக்களவை ஏறக்குறைய 100 சதவீதம் செயல்திறனை எட்டியுள்ளது என்று மக்களவைத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்களும், பட்ஜெட் தொடர்பான விவாதங்களும், கேள்விகளும், பதில்களும் நடந்தன. இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரை இரு அமர்வுகளாக நடத்த மத்தியஅரசு திட்டமிட்டது.

இதன்படி முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ம் தேதியும், மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி 2-வது அமர்வையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநிலங்களவையும், மக்களவையும் முன்கூட்டியே முடிக்கப்பட்டன.

இதில் மக்களவை தொடக்கத்தில் கூடியபோது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் எதிர்க்கட்சிகளின் அமளி, கூச்சல் காரணமாக முதல் சில நாட்கள் அவை முழுமையாக நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் வந்த நாட்களில் கூடுதல் நேரம் மக்களவையில் விவாதங்கள், நடந்ததால், நள்ளிரவு வரை விவாதங்கள் நடந்ததால், அவையின் செயல்திறன் 100 சதவீதத்தை எட்டியுள்ளது.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில் “ பிப்ரவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை மக்களவை செயல்திறன் என்பது 10 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால், 8 ம் தேதி முதல் 11ம் தேதிவரை செயல்திறன் 164 சதவீதமாக இருந்தது. சராசரியாக செயல்திறன் 99.5 சதவீதம் இருந்தது.

50 மணிநேரம் அவையை நடத்த திட்டமிடப்பட்டதில் 49 மணிநேரம் 17 நிமிடங்கள் அவை நடந்துள்ளது. சில நாட்களில் நள்ளிரவுக்கும் மேலாக அவை நடந்ததால், இந்த சதவீதத்தை எட்ட முடிந்தது.

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 130 எம்.பி.க்கள் பேசியுள்ளனர், 16 மணிநேரம் 39 நிமிடங்கள் விவாதங்கள் நடந்துள்ளன. 10 மணிநேரம் மட்டுமே விவாதத்துக்கு ஒதுக்க அலுவல் ஆலோசனைக் குழு திட்டமிட்டது, ஆனால், அனைத்து எம்.பி.க்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் 14 மணிநேரம் 40 நிமிடங்கள் நடந்தது. இதில் 117 எம்.பி.க்கள் பங்கேற்று பேசினர். குறிப்பாக 26 பெண் எம்.பி.க்கள் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்று பேசியதும், பட்ஜெட் விவாதத்தில் 23 பெண் எம்.பி.க்கள் பேசியதும் நிறைவாக இருந்தது. கேள்வி நேரத்துக்கு பி்ந்தியநேர விவாதத்தில் 173 எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர்.

மக்களவையில் தொடக்கத்தில் உறுப்பினர்களின் அமளியால் வீணான நேரம், பின்னர் கூடுதல் நேரம் எம்.பி.க்கள் அமர்ந்து நள்ளிரவு வரை விவாதம் நடந்ததால் அது ஈடுகட்டப்பட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆதலால், அனைத்து எம்.பி.க்களும் அவையின் ஜனநாயக, தார்மீக, மரபுகளை விதிகளை உணரந்து கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x