நீதித்துறை குறித்து ரஞ்சன் கோகாய் பேசியது அதிர்ச்சியாக இருக்கிறது: சரத்  பவார் கவலை

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்: கோப்புப்படம்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்: கோப்புப்படம்
Updated on
2 min read

நீதித்துறை குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியது எனக்குக் கவலையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியா டுடே சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் பங்கேற்றார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், “மக்கள் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால் ஏன்தான் நீதிமன்றத்துக்கு வந்தோம் என்று கூறும் அளவுக்கு வேதனைப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றம் சீர்குலைவை நோக்கிச் செல்கிறது.

நீதிமன்றத்துக்கு நான் சென்றால், எனக்குத் தீர்ப்பு கிடைக்காது. அதற்காக நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும். இதைக் கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. யார் நீதிமன்றத்துக்குப் போவது. நீதிமன்றத்துக்குச் சென்றால் வேதனைப்பட வேண்டியிருக்கும்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரஞ்சன் கோகாய் கருத்து குறித்து சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில், “ரஞ்சன் கோகாய் கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீதித்துறையைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என முன்மாதிரி இருக்கிறது.

தன்னுடைய பதவிக் காலத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும், என்ன நினைத்தார் என்பது குறித்தும் அவர் உதாரணங்களுடன் விளக்கினால் நாட்டுக்கு ஒளிமயமாக, உதவியாக இருக்கும். பாஜக ஆசியுடன் மாநிலங்களவையில் இருக்கும் கோகாய் நீதித்துறையில் ஒருபகுதியாக பல ஆண்டுகளாக இருந்தவர். நீதித்துறை குறித்து ஓய்வு பெற்றபின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புனேவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் பிரதமர் மோடி பேசியது குறித்து நான் கடந்த வாரம் படிக்க நேர்ந்தது. இந்திய நீதித்துறையின் தரம் உயர்வாக இருக்கிறது. நாம் நன்றாக இருப்பதாக உணர்கிறோம்.

ஆனால், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியின் அறிக்கை, எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நீதித்துறையின் உண்மைகளை விளக்க முயன்றாரா என எனக்குத் தெரியவில்லை. நீதித்துறை குறித்த கோகாய் கருத்துகள் வேதனையாக உள்ளன” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in