Last Updated : 15 Feb, 2021 10:32 AM

 

Published : 15 Feb 2021 10:32 AM
Last Updated : 15 Feb 2021 10:32 AM

குடியுரிமைத் திருத்தச் சட்டம் கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் பினராயி விஜயன் உறுதி

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “கரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணிகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து கேரள அரசின் நிலைப்பாட்டை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் செல்லும் பிரச்சாரப் பயணத்தை முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அதன்பின் நிருபர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில், “சில விஷயங்களைப் பற்றி சிலர் மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அவர் பேசத் தொடங்கிய பின்பும் தொடர்ந்து மவுனமாக இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. கரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சிஏஏ சட்டமாக மாற்றப்பட்ட நிலையில், எவ்வாறு கேரள அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்க முடியும் எனச் சிலர் கேட்கிறார்கள்.

நாங்கள் சொல்வது என்னவெனில், கேரளாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. இதன் அர்த்தம் கேரளாவில் சிஏஏ கிடையாது. இதை நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ கேரளாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்தை எடுத்து வருகிறது. கேரளாவில் மட்டுமல்ல நாட்டில் எந்தப் பகுதியிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்பது நாங்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x